
கோலாலம்பூர், அக்- 21-அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr Akmal Saleh தனது Honda மோட்டார் சைக்கிளையும் tilapia மீன்களையும் ஏலம் விடுகிறார். அவதூறு வழக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, Seputeh நாடாளுமன்ற உறுப்பினர் Teresa Kokக்கிற்கு வழங்க வேண்டிய 300,000 ரிங்கிட் இழப்பீடு மற்றும் சட்டச் செலவுகளைச் செலுத்துவதற்காக அவர் அவ்வாறு செய்கிறார்.
நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அதற்கான தொகையைச் செலுத்தும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக Akmal தனது முகநூல் பதிவில் தெரிவித்தார். மற்றவர்களிடம் நிதி திரட்டுவதற்குப் பதிலாக, தம்மிடமுள்ள பொருட்களை விற்று முதலில் பணத்தைத் திரட்ட விரும்புவதாகவும் அவர் கூறினார்.
தம்மிடம் உள்ள சேமிப்புத் தொகை போதாது என்றும், விற்பனை செய்யக்கூடிய நிலம் அல்லது வீடு இல்லை என்றும் Akmal குறிப்பிட்டார். சொந்த மோட்டார் சைக்கிளும் tilapia மீன்களும் மட்டுமே தமது தற்போதைய சொத்துகள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 100 ரிங்கிட் முன்பணத்தைச் செலுத்தி, அதற்கான ரசீதுடன் ஏலம் எடுக்க விரும்பும் பொருள் மற்றும் தாங்கள் வழங்கும் விலையைச் சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்தில் வெற்றி பெறாதவர்களுக்கு முன்பணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்றும் Akmal கூறினார்.
பன்றி இறைச்சி அல்லது மதுபானம் பரிமாறாத உணவகங்கள் மற்றும் உணவு வணிகங்களுக்கு ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்குவது சிறு வணிகர்களுக்குச் சுமையாக அமையலாம் என Teresa Kok கூறியிருந்தார். அவரை “வயதான nyonya” என்று விமர்சித்ததுடன், அவரது நெற்றியில் “ஹலால் அல்லாதது” என முத்திரையிட வேண்டும் எனக் கூறி Akmal டிக் டாக் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அது தொடர்பான அவதூறு வழக்கில், மலாக்கா உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை Teresa Kokக்கிற்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து Teresa Kokக்கிற்கு 250,000 ரிங்கிட் இழப்பீடும் சட்டச் செலவாக 50,000 ரிங்கிட்டும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.



