
கோலாலம்பூர், அக்-22-தேசிய ஒருங்கிணைப்பு ஆய்வு மற்றும் பயிற்சி கழகத்தின் (IKLIN) ஆலோசக வாரியக் குழுவான LPI-க்கு, 2026–2028 காலகட்டத்திற்காக கல்வியாளர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்களை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் வழங்கினார். தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான ஆராய்ச்சி, பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு மூலோபாய வழிகாட்டுதல்களை வழங்குவது இக்குழுவின் முக்கியப் பணியாகும். இனங்களுக்கிடையிலான பதற்றங்கள், வெறுப்புப் பேச்சு, சமூக மோதல்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கான அணுகுமுறைகளை உருவாக்குவதிலும் இக்குழு பங்களிக்கும். 2027ஆம் ஆண்டுக்குள் IKLIN அமைப்பைச் சிறந்த மையமாக மேம்படுத்த நிறுவன மறுசீரமைப்பு, சர்வதேச சிறந்த நடைமுறைகள், கல்வி நிறுவனங்களுடனான ஆராய்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட ஐந்து முக்கிய வழிகாட்டுதல்களை அமைச்சர் முன்வைத்தார்.


இக்குழுவில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் Dato Haslina Abdul Hamid, தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் Zulkifli Hashim உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். கல்வியாளர்களில் பேராசிரியர் டத்தோ டாக்டர் சிவமுருகன் பாண்டியன், சன்வே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான துணைவேந்தர் பேராசிரியர் மகேந்திரன் சங்கரன் நாயர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், Glocal Creation Consultancy நிறுவனர் மற்றும் தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான டத்தோ கந்தேசன் லெச்சுமணன் உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். மலாயா பல்கலைக்கழகத்தின் மலாய் ஆய்வு மையத்தின் டீன் பேராசிரியர் Dr Awang Azman, தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Dr Novel Anak Lyndon உள்ளிட்ட கல்வியாளர்களும் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சமூகத் துருவமுனைப்பு, அடையாள அரசியல், டிஜிட்டல் அறிவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக மீள்திறன் போன்ற துறைகளில் ஆராய்ச்சியை வலுப்படுத்தவும் இக்குழு வழிகாட்டும். பொருளாதார அமைச்சு மற்றும் மலேசிய புள்ளியியல் துறையுடன் இணைந்து தரவுப் பகிர்வை மேம்படுத்துவதும், 13ஆவது மலேசியத் திட்டத்தின் தேசிய ஒற்றுமை இலக்குகளுக்கு ஏற்ப IKLIN-ஐ உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.



