Latestமலேசியா

இனி அழுக்குத் துணிகள் இல்லை: Checkout பணிகளுக்கு Airbnb வரம்புகளை விதிக்கிறது

கோலாலம்பூர், அக்-23-விடுமுறைக்காலத் தங்குமிடங்களில் checkout செய்யும்போது, விருந்தினர்கள் மேற்கொள்ள வேண்டிய துப்புரவுப் பணிகளுக்கு Airbnb புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்கள், நவம்பர் 20ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு செய்யப்படும் முன்பதிவுகளுக்குப் பொருந்தும்.

புதிய விதிகளின்படி, படுக்கை விரிப்புகளை அகற்றுதல், துணிகளைத் துவைத்தல், பாத்திரங்களைக் கழுவி வைப்பது, குப்பைகளை வெளியே எடுத்துச் செல்வது போன்ற பணிகளை விருந்தினர்கள் செய்ய வேண்டும் என தங்குமிடங்களை வழங்கும் தரப்புகள் பொதுவாகக் கோர முடியாது. இருப்பினும், அழுக்குப் பாத்திரங்களைத் தொட்டியில் வைப்பது, பயன்படுத்திய துண்டுகளைச் சேகரிப்பது, குப்பைகளை உரிய தொட்டிகளில் போடுவது போன்ற எளிய பணிகளைச் செய்யக் கோரலாம்.

மேலும், தங்குமிடத்தில் வழங்கப்படும் வசதிகளை விருந்தினர்கள் பயன்படுத்துவதை தங்குமிடங்களை வழங்குவோர் தடுக்க முடியாது. எனினும், வெளியேறும்போது குளிரூட்டியை அணைப்பது போன்ற பொறுப்பான செயல்களைக் கடைப்பிடிக்குமாறு கோரலாம். தங்குமிட விதிகள் தொடர்பான குழப்பங்களையும், விருந்தினர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் குறைப்பதே இந்த மாற்றத்தின் நோக்கம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்புதிய கொள்கைக்கு சில தங்குமிட நிர்வாகத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். துப்புரவுப் பணிகளுக்கான செலவுகள் அதிகரிப்பதுடன், அடுத்த விருந்தினர்களுக்காகத் தங்குமிடத்தைத் தயார்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படலாம் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேவேளை, துப்புரவுக் கட்டணங்களைச் செலுத்தும் நிலையில், கூடுதல் வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை எனப் பல பயணிகள் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர்.

இந்த மாற்றங்கள் மலேசியாவிலுள்ள Airbnb சேவையைப் பயன்படுத்தும் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கும் விருந்தினர்களுக்கும் பொருந்தும். இதனால், தங்குமிடங்களை வழங்குவோர் தங்களது வீட்டுவிதிகளை மறுபரிசீலனை செய்து, நியாயமான கோரிக்கைகளை மட்டும் முன்வைக்க வேண்டியிருக்கும். தங்குமிடத்தை முன்பதிவு செய்வதற்கு முன், check-out விதிகளைத் தெளிவாக அறிந்து கொள்வதும் பயணிகளுக்கு உதவும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!