Latestமலேசியா

கோலா குராவ் அருகே மணல் அகழ்வுக் கப்பல் மூழ்கியது; 19 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்பு

ஈப்போ, அக்-26-பேராக், கோலா குராவ் அருகே Pulau Pasir Hitamமுக்கு வடமேற்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் மணல் அகழ்வுக் கப்பல் ஒன்று நீரில் மூழ்கியதில், அதிலிருந்த 19 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அச்சம்பவம் குறித்து கோலா குராவ் கடல்சார் மண்டல செயல்பாட்டு மையத்திற்கு அதிகாலை 5.53 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான MMEAவின் பேராக் மாநில இயக்குநர் கடல்சார் கேப்டன் Zainudin Mohd Zuki தெரிவித்தார்.

மீட்புப் பணியில் MMEA-வின் ‘KM Gagah’ கப்பலும் ‘Perkasa 1238’ படகும் ஈடுபடுத்தப்பட்டன. சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த கடல்சார் சமூகத்தினரும் உதவினர். இதில், ஒன்பது பணியாளர்களை ‘MV Yaode 1’ கப்பலும், உயிர்காக்கும் மிதவைப் படகில் இருந்த மற்ற ஒன்பது பேரை ‘MV Vivo Diya’ கப்பலும் மீட்டன.

இதனிடையே, காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 57 வயது Tang Jifu என்பவர் ‘Perkasa 1238’ படகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மற்ற 18 பணியாளர்கள் பத்து மவுங் படகுத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், Tang Jifu கோலா குராவ் கடல்சார் மண்டல தலைமையகப் படகுத்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தேடல் மற்றும் மீட்புப் பணிகள் மாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தன.

இவ்வேளையில், கடலில் பயணிப்போர் உயிர்காக்கும் அங்கிகளை அணிவதுடன், பாதுகாப்பு உபகரணங்கள் நல்ல நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என Zainudin வலியுறுத்தினார். கடலில் அவசரநிலை ஏற்பட்டால் 999 என்ற அவசர எண்ணையோ அல்லது கோலா குராவ் கடல்சார் மண்டல செயல்பாட்டு மையத்தின் 011-3525 9919 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!