Latestமலேசியா

உயிருள்ள பன்றிகள் இறக்குமதி; கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன; துணையமைச்சர் விளக்கம்

கோலாலம்பூர், அக்டோபர்-27,சரவாக்கிலிருந்து சிலாங்கூருக்கு உயிருள்ள பன்றிகள் இறக்குமதி செய்யப்படுவது, கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படுவதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத துணையமைச்சர் Chan Foong Hin தெரிவித்துள்ளார்.

கிள்ளான் துறைமுகம் வழியாகக் கொண்டு வரப்படும் பன்றிகள், இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே இறக்கப்பட அனுமதிக்கப்படுகின்றன.

அதுவும், சிறப்புக் கூண்டுகள் மூலம் இறக்கப்படும் பன்றிகள், வேறு எங்கும் நிறுத்தப்படாமல் நேரடியாக ரவாங்கிலுள்ள இறைச்சிக் கூடத்திற்கு லாரிகளில் கொண்டுச் செல்லப்படுவதாக, அறிக்கையொன்றில் அவர் விளக்கினார்.

ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பன்றி வளர்ப்புத் துறையில், இறைச்சி விநியோகத்தையும் விலையையும் சீராக வைத்திருக்க, கடந்த 2025 ஜூலை மாதம் முதல் இந்த இறக்குமதி அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்நிலையில், பன்றிகள் இறக்குமதி செய்யப்படுவது சுற்றுச்சூழல் தூய்மைக் கேட்டை ஏற்படுத்துவதாகவும், சிலாங்கூர் சுல்தானின் உத்தரவுக்கு முரணானது என்றும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை Chan நிராகரித்தார்.

உண்மையான ஆதாரங்கள் இல்லாமல் இவ்விவகாரத்தைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசிய முஸ்லீம் பயனீட்டாளர்கள் சங்கமான PPIM, உயிரோடு பன்றிகளைக் கொண்டுச் செல்வது சுற்றுச்சூழலை மாசடையச் செய்யும் அபாயத்தைக் கொண்டிருப்பதாக முன்னதாகக் கவலைத் தெரிவித்திருந்தது.

அதோடு, துறைமுகப் பணியாளர்கள் மற்றும் அருகில் வாழும் மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் அது அமைந்திருப்பதாக அது கூறியது.

அதே போல்​, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினரின் தேவையைப் பூர்த்திச் செய்ய பன்றி இறைச்சி மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் கட்டளையை, உயிருள்ள பன்றிகளை இறக்குமதி செய்வது அவமதிக்கும் செயலாகாதா என, சிலாங்கூர் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!