
கூச்சிங், அக்டோபர்-27,மலேசியாவில் 23 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
முன்பு, 27 பெண்களில் ஒருவருக்கு இந்த அபாயம் இருந்த நிலையில், தற்போது அது அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக அவர் கூறினார்.
நாட்டில் பெண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் தொடர்ந்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
2023 தேசிய சுகாதார ஆய்வின்படி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 71 விழுக்காட்டினர் இதுவரை மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனையை மேற்கொண்டதில்லை.
தவிர, 46 விழுக்காட்டினர் சுய மார்பகப் பரிசோதனையை மேற்கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால், நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 95 விழுக்காடு வரை இருப்பதாக நேன்ஸி கூறினார்.
இவ்வேளையில், அரசாங்கத்தின் மானியத்துடனான மார்பகப் பரிசோதனைத் திட்டத்தின் மூலம், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் சுமார் 599,000 பெண்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



