Latestமலேசியா

வண்ணம் தெளிப்பதற்கும் பெட்ரோல் குண்டுகளை வீசவும் கல்லூரி மாணவர்களுக்கு 1,000 ரிங்கிட் வரை கூலி

ஈப்போ, அக்-27-கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல மாநிலங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று உள்ளூர் இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வண்ணம் தெளிப்பது, பெட்ரோல் குண்டுகளை வீசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட அவர்களுக்கு தலா 500ரில் இருந்து 1,000 ரிங்கிட் வரை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள் ஆவர்.

19 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும் அக்டோபர் 22ஆம் தேதி பினாங்கில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது கைது செய்யப்பட்டதாக பேராக் மாநிலக் காவல்துறைத் தலைவர் Datuk Mohd Alwi Zainal Abidin தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களுக்கு முந்தைய குற்றப் பின்னணி இல்லை.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கும் வேளை, குற்றச் செயல்களைப் புகைப்படம் எடுத்து அனுப்பிய பின்னரே பணம் அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்நடவடிக்கைகள் தொடர்பாக பேராக், கெடா, ஜோகூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவான ஒன்பது சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. அவை குற்றவியல் சட்டத்தின் 435 மற்றும் 427ஆவது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகின்றன. 427ஆவது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 435ஆவது பிரிவின் கீழ் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

இவ்வேளையில், இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னால் உள்ளவர்களை அடையாளம் காணவும், சந்தேக நபர்கள் எவ்வாறு பணியமர்த்தப்பட்டனர் என்பதைக் கண்டறியவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருவரை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், அவரைத் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!