
கோலாலம்பூர், அக்-29-Tesla நிறுவனம் தனது தானியங்கி மின்சார வாகனமான Cybercabப்பை மலேசியாவில் நடைபெற்ற சிறப்பு முன்னோட்ட நிகழ்வில் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தியது. எதிர்கால Robotaxi போக்குவரத்து தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த அறிமுகம் அமைந்தது.
இரண்டு இருக்கைகளைக் கொண்ட Cybercabப்பில் பட்டாம்பூச்சி வடிவிலான கதவுகள் இருக்கின்றன. மேலும், steering, accelerator, பிரேக் பெடல்கள் இல்லாத இந்த வாகனம், எட்டு கேமராக்கள் மூலம் சுற்றுப்புறத்தைக் கண்காணிக்கும் Tesla Vision தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

Level 4 தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்துடன் Cybercab உருவாக்கப்பட்டுள்ளதாக Tesla பொது விவகாரப் பிரிவின் தலைவர் Hadri Haris தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் குறிப்பிட்ட செயல்பாட்டு அம்சங்களுடன் மனித ஓட்டுநரின் தொடர்ச்சியான கண்காணிப்பின்றி வாகனத்தை இயக்க உதவும். இருப்பினும், மலேசியாவில் அதன் அமலாக்கம் காலத் தேவைக்கு ஏற்பவே அமையும் என அவர் கூறினார்.
இதனிடையே, நாட்டில் 180-க்கும் மேற்பட்ட மின்னூட்டி மையங்களைக் கொண்ட வலையமைப்புடன், விற்பனைக்கு வட்டாரச் சேவைகளையும் நிறுவனம் வழங்குவதாக Tesla மலேசியாவின் வட்டார மேலாளர் Karen Teo கூறினார். மேலும், Tesla வாகனங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள Grok செயற்கை நுண்ணறிவு மூலம் பாதை வழிகாட்டி, இசை இயக்கம் மற்றும் சேருமிடங்களைக் கண்டறிதல் போன்றவற்றையும் கையாள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் Texas, Austinனில் Cybercab தொழில்நுட்பம் Robotaxi சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், மலேசியாவில் தற்போதைய அறிமுகம் தொழில்நுட்பக் காட்சிக்காக மட்டுமே உள்ளது. நாட்டில் வணிக ரீதியிலான Robotaxi சேவை தொடங்கப்படுவது குறித்து இன்னும் எதுவும் உறுதியாகவில்லை.



