Latestமலேசியா

ஜோகூர் பாருவில் அனுமதியற்ற மூன்று சக்கர வண்டிச் சேவைகளை நிறுத்த MBJB உத்தரவு

ஜோகூர் பாரு, அக்-29-ஜோகூர் பாருவில் மாநகர எல்லைக்குள் உரிய அனுமதியின்றி இயங்கும் அனைத்து மூன்று சக்கர வண்டிச் சேவைகளையும் உடனடியாக நிறுத்துமாறு ஜோகூர் பாரு மாநராட்சி மன்றமான MBJB உத்தரவிட்டுள்ளது.

இதுவரை அந்த போக்குவரத்துச் சேவைகளைத் தொடங்குவதற்கு எந்தவொரு தரப்பிடமிருந்தும் விண்ணப்பம் பெறப்படவில்லை. எந்தவொரு சேவையையும் தொடங்குவதற்கு முன்னர் முறையான அனுமதி பெறுவது அவசியம் என ஜோகூர் பாரு மேயர் Datuk Mohd Haffiz Ahmad தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் வெளிநாட்டவர் ஒருவர் மூன்று சக்கர வண்டியை ஓட்டும் காட்டும் காணொளி பரவியது தொடர்பில் அவர் கருத்துரைத்தார். பினாங்கு, மலாக்கா மற்றும் ஜோகூரின் மூவார் பகுதிகளைப் போல, மூன்று சக்கர வண்டிச் சேவை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியதாக இருந்தாலும், அதனைத் தொடங்கும் முன் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய சேவை நடைமுறைப்படுத்தப்பட்டால், அலங்காரங்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட வசதிகளுடன் மூன்று சக்கர வண்டிகள் பயணிகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதேவேளை, வண்டிகளை ஓட்டுபவர்கள் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் பயணிகளுக்கு மாநிலத்தின் சுற்றுலாத் தலங்கள் மற்றும் வரலாறு குறித்த தகவல்களை வழங்க முடியும் என்றும் Mohd Haffiz கூறினார்.

இவ்வேளையில், சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒருவர் இரு பயணிகளிடம் 15 நிமிடப் பயணத்துக்கு 60 ரிங்கிட் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அக்காணொளி குறித்து பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் அச்சேவைக்கு உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!