Latestமலேசியா

ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவைகளை வழங்கும் MAHSA நிபுணத்துவ மருத்துவமனை

பண்டார் சௌஜானா புத்ரா, அக்-29-MAHSA நிபுணத்துவ மருத்துவமனை (MAHSA Specialist Hospital – MSH) சிலாங்கூரின் தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவச் சேவைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2024 மே 19-ஆம் தேதி திறக்கப்பட்ட இம்மருத்துவமனை, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை வழங்குவதுடன், மருத்துவச் சேவைகளை எளிதில் அணுகுவதற்கான வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது.

250 படுக்கைகளுக்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ள இம்மருத்துவமனை, எதிர்காலத்தில் அதன் திறனை 500 படுக்கைகளாக விரிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, இருதயநோய் ஆய்வகம், 24 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை வசதிகள் ஆகியவை இங்குள்ளன.

மருத்துவச் சேவைகளைச் சீரமைக்க டிஜிட்டல் பதிவுகள், ஒருங்கிணைந்த மருத்துவமனை முறைகள் மற்றும் நோயாளிகளுக்கான MSH+ கைப்பேசி செயலி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. சந்திப்பு முன்பதிவு, சுகாதாரத் தகவல்களை அணுகுதல், கட்டணங்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் இத்தொழில்நுட்பங்கள், நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதுடன் மருத்துவக் குழுக்களிடையேயான தகவல் பரிமாற்றத்தையும் எளிதாக்குகின்றன.

மருத்துவமனைக்கு அப்பாற்பட்ட பராமரிப்பையும் வலுப்படுத்தும் வகையில், பொது மருத்துவர்களுடன் இணைந்து செயல்படும் கேர்நெட் (CareNet), வீட்டிலேயே தாதியர் மற்றும் மறுவாழ்வுச் சேவைகளை வழங்கும் MSH+ Home Care, மின்னணு மருந்தகச் சேவை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அம்மருத்துவமனை நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்னரும், சிகிச்சைக்குப் பின்னரும் தொடர்ச்சியான பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது.

இதனிடையே மருத்துவமனையின் வடிவமைப்பு நோயாளிகளின் தேவைகள் மற்றும் சிகிச்சைச் சேவைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியும் பொது அறுவை சிகிச்சை நிபுணருமான Dato Dr Anitha Haniffa தெரிவித்தார்.

மலேசிய சுகாதாரத் தரச் சங்கத்திடமிருந்து (MSQH) இவ்வாண்டு மார்ச் மாதம் நான்கு ஆண்டுகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற இம்மருத்துவமனை, மருத்துவப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறது. MAHSA பல்கலைக்கழகத்துடனான ஒத்துழைப்புடன் இம்மருத்துவமனை நடைமுறைப் பயிற்சிகளுக்கும் மருத்துவத் தொழில்முறை வளர்ச்சிக்கும் ஆதரவளித்து, தடுப்பு, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் தொடர்ச்சியான சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையை முன்னெடுத்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!