
போர்ட் லூயிஸ், அக்டோபர்-30,இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மொரீஷியஸில் சுமார் 2.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கஞ்சாவைக் கடத்த முயன்ற சந்தேகத்தில், 55 வயது மலேசிய சமையல்காரர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 23-ஆம் தேதி, துபாயிலிருந்து மொரீஷியஸ் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பெட்டிகளைச் சோதனையிட்டனர்.
அப்போது, துணிகளுக்கு அடியில், காற்றுப் புகாதவாறு 17 கருப்புப் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.
அவற்றைப் பிரித்துப் பார்த்த போது, மொத்தமாக 17.9 கிலோ கிராம் கஞ்சா எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைதான மலேசியர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, போதைப்பொருள் இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மொரீஷியஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாண்டு, மொரீஷியஸ் நாட்டுக்குப் போதைப்பொருள் கடத்த முயன்றதன் பேரில் கைதான இரண்டாவது மலேசியர் இவராவார்.
இதற்கு முன் செப்டம்பர் 15-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து மொரீஷியஸ் வந்திறங்கிய 70 வயது ஆடவர், 6.18 கிலோ கிராம் எடையில், சுமார் 800,000 ரிங்கிட் மதிப்பிலான கஞ்சாவுடன் வசமாக சிக்கினார்.



