Latestமலேசியா

மலாக்கா தேர்தல்: பெர்சாத்து விலகியதால் காடேக்கில் 4 முனைப் போட்டி

மலாக்கா, அக்டோபர்-31 – மலாக்கா மாநிலத் தேர்தலில், இந்திய வாக்காளர்களைக் கணிசமாகக் கொண்ட காடேக் (Gadek) சட்டமன்றத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.

இன்று காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த போது, கடைசி நேரத்தில் பெர்சாத்து கட்சி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யாமல் போட்டியிலிருந்து விலகியது.

இந்நிலையில், அங்கு பாரிசான் நேஷனல் சார்பில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையாற்றிய அனுபவம் கொண்ட மாநில ம.இ.கா துணைத் தலைவர் எஸ். நடராஜன் களமிறங்குகிறார்.

அடித்தட்டு மக்களின் சுகதுக்கங்களில் தோளோடு தோள் நின்று சேவையாற்றிய இவர், 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தளராது உதவிகளை வழங்கி தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

15 ஆண்டுகால வணிக மேலாண்மை அனுபவமும் பெற்ற அவரை எதிர்த்துப் பக்காத்தான் ஹராப்பான் (PH) சார்பில் ஜெகசீலன், பெர்சாமா கட்சி சார்பில் லவீன் மற்றும் புத்ரா கட்சியின் சார்பில் லைலா நோரிண்டா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

60 விழுக்காடு மலாய்க்காரர்களையும், 20 விழுக்காடு சீனர்களையும், 17 விழுக்காடு இந்தியர்களையும் கொண்ட இந்த பன்முகத் தொகுதியை, கடந்த 2021-ஆம் ஆண்டுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கைப்பற்றியது.

2013 முதல் பாரிசான் வசமிருந்த இத்தொகுதியை 2018-ல் PH வென்ற நிலையில், மீண்டும் 2021-ல் பாரிசான் தனது கோட்டையை மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உள்ளூர் தலைவரான எஸ். நடராஜனின் அனுபவம் காடேக்கில் பாரிசான் கூட்டணிக்குக் கூடுதல் பலமாக அமைந்து, தொகுதியைத் தக்க வைக்க உதவுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!