மோட்டார் சைக்கிளில் பந்தயம், ஆபத்தான சாகசம்: சிங்கப்பூரியர் உட்பட மூவருக்கு தலா RM3,500 அபராதம்

ஜோகூர் பாரு, நவம்பர் 3 – மலேசியா–சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலையில் (LINKEDUA), ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதுடன் பந்தயத்தில் ஈடுபட்ட மூவருக்கு தலா 3,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜோகூர் பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்தது.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அதிகாலை 2.10 மணியளவில், இஸ்கண்டார் புத்ரிக்கு அருகிலுள்ள LINKEDUA நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய 12.5ஆவது கிலோமீட்டரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகள் தேசிய சேவையில் ஈடுபட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதுடன் வேகத்தைச் சோதிக்கும் ஆபத்தான சாகசத்திலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். மற்ற இருவரும் அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
ஒவ்வொருவரும் 3,500 ரிங்கிட் அபராதம் செலுத்தத் தவறினால், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



