
தமிழகம், நவ-04-தமிழகத்தில் புதிதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களைத் திரையரங்குகளில் முதல் ஒரு வாரத்திற்கு நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல்வர் ஜோசஃப் விஜய் வெளியிட்ட அந்த உத்தரவிற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் பிலிம் ஆக்டிவ் புரோடியூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து அரசிடம் முன்னதாக அக்கோரிக்கையை முன்வைத்திருந்தன. புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஏழு நாள்களுக்கு ஆறு காட்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என அவை வலியுறுத்தியிருந்தன.
1957ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் விதிகளின்படி, திரையரங்குகளில் நாளொன்றுக்கு நான்கு காட்சிகளை திரையிட மட்டுமே அனுமதிக்கப்பட்டது. தற்போதைய அரசு பதவியேற்ற பின், புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஏழு நாட்கள், வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஐந்து காட்சிகள் வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மைய நிலவரமாக, திரைப்படத் துறையினரின் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து ஆறு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை காட்சிகளைத் திரையிடலாம்.
இந்த அனுமதி புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குப் பொருந்தும். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்கள், உள்ளூர் பண்டிகை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் தினசரி ஆறு காட்சிகளைத் திரையிடலாம். அரசின் அம்முடிவு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.



