
இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள்; பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவளியுங்கள் -துணையமைச்சர் வேண்டுகோள்
மலாக்கா மாநிலத் தேர்தலில் இளம் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ள பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என மிரி நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றுலா, கலை, கலாசார துணை அமைச்சருமான சியூ சூன் மான் கேட்டுக்கொண்டார்.
கோலா லிங்கியில் 24 வயதான முகம்மது முக்லிசுல் முபின் ஜுலாசபியா, கிளேபாங்கில் 26 வயதான பர்சானா ஹயானி முகமட் நாசிர், பெங்காலான் பத்துவில் 31 வயதான ஜேசன் சே சி நாதன், அசஹானில் 37 வயதான தேனேஷ் பாலசுப்ரமணியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இளைய தலைமுறையினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பது துணிச்சலான முடிவு எனக் குறிப்பிட்ட சியூ, அவர்களுக்கு வாய்ப்பளித்து தங்கள் தலைமையையும் திறமையையும் நிரூபிக்க வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.
தாமும் 31 வயதில் மிரி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளையும் கொள்கைகளையும் இணைக்கும் நல்ல தொடக்கமாக மாநில சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு அமையும் என்றார்.
இளைஞர்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டு தானியங்கி வாக்காளர் பதிவு நடைமுறைக்கு வந்துள்ள சூழலில் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கெஅடிலான் கட்சியின் மலாக்கா வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் பெண்கள் என்பது அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் முயற்சியைக் காட்டுவதாகவும் சியூ கூறினார்.



