
கோலாலம்பூர், நவ 12-பாட்டிலில் விற்கப்படும் சமையல் எண்ணெய்க்கான உச்ச வரம்பு விலையை அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது. அதன்படி, 1 கிலோகிராம் எண்ணெய் 6.90 ரிங்கிட், 2 கிலோகிராம் 13.30 ரிங்கிட், 3 கிலோகிராம் 19.60 ரிங்கிட், 5 கிலோ 30.90 ரிங்கிட் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் கச்சா செம்பனை எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, அந்நடவடிக்கைக்கு அமைச்சரவை நவம்பர் 6ஆம் தேதி ஒப்புதல் அளித்ததாக உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறை அமைச்சர் Datuk Armizan Mohd Ali தெரிவித்தார். அதற்காக மாதந்தோறும் 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.
அந்நடவடிக்கை, பாட்டில் சமையல் எண்ணெய் விநியோகத் தடைகள் மற்றும் விலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் செலவுச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அக்டோபரில் ஒரு டன் கச்சா செம்பனை எண்ணெயின் சராசரி விலை 4,400 ரிங்கிட்டாக இருந்த நிலையில், அரசின் தலையீடு இல்லாவிட்டால் 5 கிலோகிராம் பாட்டில் சமையல் எண்ணெயின் விலை 34 ரிங்கிட்டாக உயர்ந்திருக்கும் என Armizan கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், உணவகத் துறைக்கான 15,000 வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டின் கீழ் வேலைக்கு அமர்த்துவதற்கான விண்ணப்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளை, 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்தப் பணியாளர்களில் வெளிநாட்டு ஊழியர்களின் விகிதத்தை 10 விழுக்காடாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவகத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட Armizan, வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் பரிந்துரைகளை முன்வைக்குமாறு மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (PRESMA) உள்ளிட்ட முக்கியத் தரப்புகளைக் கேட்டுக் கொண்டார்.



