
ஷா ஆலாம், நவ.13-சிலாங்கூர், கெப்போங்கில் காவல் வீரர் ஒருவரைப் பாராங் கத்தியாக் தாக்கிய வெளிநாட்டவருக்கு, சம்பவத்திற்கு முன்பே மனநலப் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாகச் சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
அந்நபர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வீட்டில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் அவருக்கு அறிமுகமான ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனை அடுத்து, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுகாதார அமைச்சின் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்நபர் சம்பவத்தின் போது மனநிலை சரியில்லாமல் இருந்ததாக நம்பப்படுகிறது. எனினும், உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடரப்படுவதாக Datuk Shazeli Kahar கூறினார்.
அண்டை வீட்டார், உள்ளூர்வாசிகள், சந்தேக நபருக்கு அறிமுகமானவர்கள் என இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், சந்தேக நபர் மாணவர் அனுமதி அட்டையின் கீழ் நாட்டிற்குள் நுழைந்தது, அந்த அனுமதி அட்டை மற்றும் கடப்பிதழ் காலாவதியாகியிருந்தது, அவர் தங்கியிருந்த அடுக்குமாடி வீட்டின் அதிகாரப்பூர்வ வாடகைதாரர் அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வேளையில், தாக்குதலில் பலத்த காயமடைந்த Lans Koperal Thierry Rodger anak Fendyயின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக Shazeli தெரிவித்தார். துண்டிக்கப்பட்ட அவரது வலது மணிக்கட்டை கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக மீண்டும் இணைத்துள்ளனர். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த புதன்கிழமை, கெப்போங், Taman Desa Amanpuri அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் வீரரை பாராங் கத்தியால் தாக்கிய சந்தேக நபர், அன்றிரவு காவல்துறையினரை மீண்டும் தாக்க முயன்றபோது சுடப்பட்டார். காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.



