Latestமலேசியா

அனைத்து மலேசியர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், நவம்பர்-14 – மலேசியாவில் இனம், மதம் மற்றும் பின்னணி வேறுபாடின்றி அனைத்து மக்களின் உரிமைகளும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் சிறப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், சீனர்கள், இந்தியர்கள் உள்ளிட்ட இதர சமூகத்தினரின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

பிரிக்ஃபீல்ட்ஸ், லிட்டில் இந்தியாவில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தீபாவளி கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றொரு சமூகத்தின் உரிமைகளைப் பாதிப்பதாகக் கருதக்கூடாது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் இன, மத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும்;

அனைத்து மலேசியர்களுக்கும் நீதி மற்றும் சமமான வாய்ப்புகள் உறுதிசெய்யப்படுவதே மடானி அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ, ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் R. யுனேஷ்வரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் P.பிரபாகரன், செப்பூத்தே எம்.பி. தெரேசா கோக், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ R. நடராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய அமைச்சர் ஏரன் அகோ டகாங், பன்முகத்தன்மையில் ஒற்றுமையாக வாழ்வதே மலேசியாவின் தனித்துவமான பலம் வருணித்தார்.

இத்தகைய கொண்டாட்டங்கள் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் பரஸ்பர மரியாதையையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, தேசிய அளவிலான தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் ஆர். யுனேஷ்வரன் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சும், மலேசிய இந்திய வர்த்தகத் தொழில்துறை சம்மேளனமான MAICCI-யும் இணைந்து இக்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

‘தீபாவளியின் ஒளி, ஒற்றுமையின் எழுச்சி’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீணை, மிருதங்க இசை நிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகள் மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்புகள் இடம்பெற்றன.

மேலும், மலாய், சீன, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி மற்றும் மலையாள சமூகங்களின் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!