Latestமலேசியா

RM29 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்; தாய்லாந்தில் 5 மலேசியர்கள் கைது, கூட்டு வேட்டை

கோலாலம்பூர், நவம்பர்-17,தாய்லாந்தில் சுமார் 29 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 240 கிலோ கிராம் ஷாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், மலேசியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கடத்தல் கும்பலின் தலைவனை அடையாளம் காண, புக்கிட் அமான் போலீஸ், தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 5 மலேசிய ஆடவர்களும் இரண்டு தாய்லாந்து பெண்களும் கைதுச் செய்யப்பட்டனர்.

கைதான மலேசியர்கள் 34 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் நால்வர் கெடாவையும் ஒருவர் சிலாங்கூரையும் சேர்ந்தவர்கள் என்றும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

அவர்களில் இருவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, இரண்டு Toyota Alphard சொகுசு வாகனங்களில், ஒலிபெருக்கி அமைப்பைப் போன்று மாற்றியமைக்கப்பட்ட இரகசிய அறைகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் தலா 120 கிலோ கிராம் ஷாபு பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருளைக் கடத்துவதற்கு ஒவ்வொரு பயணத்திற்கும் 61,000 முதல் 122,000 ரிங்கிட் வரை சன்மானம் வழங்கப்படும் என சந்தேக நபர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கடத்தல் கும்பலின் மலேசியத் தொடர்புகளைக் கண்டறிய தாய்லாந்துப் போலீஸுடன் விசாரணை தொடருவதாக ஹுசேன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!