
கோலாலம்பூர், நவ.17-அரசியல் தலைவர்கள் தொடர்பான 1,178 உள்ளடக்கங்கள் உட்பட, படங்கள் மாற்றியமைக்கப்பட்ட மொத்தம் 13,883 deepfake உள்ளடக்கங்கள் டிஜிட்டல் தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அந்நடவடிக்கை 2024 ஜனவரி 1 முதல் அக்டோபர் 31 வரை மேற்கொள்ளப்பட்டதாக தொடர்புத்துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்தார்.
பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMCயின் கோரிக்கையை ஏற்று சேவை வழங்குநர்கள் அவற்றை நீக்கினர். மேலும், 2025 ஜனவரி முதல் 2026 அக்டோபர் வரை AI தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக 61 சம்பவங்களையும் MCMC விசாரித்துள்ளது.
அவற்றில் 10 நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, ஆறு வழக்குகளில் மொத்தம் 19,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நான்கு வழக்குகள் விசாரணையில் உள்ளதாக Fahmi கூறினார்
Deepfake மற்றும் AI மூலம் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த 2025 இணையப் பாதுகாப்புச் சட்டம் வகை செய்கிறது. அதேவேளை, ஜூன் 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இடர் தணிப்புக் குறியீடும் அதற்கு வலு சேர்க்கிறது.
அதன் கீழ், AI மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், ஒலிகள் மற்றும் காணொளிகள் தெளிவாகக் குறிக்கப்பட வேண்டும். மேலும், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்க சேவை வழங்குநர்கள் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் Fahmi வலியுறுத்தினார்.



