
குவாந்தான், நவம்பர் 17 – பகாங், ஜெராந்துட்டில் ஏழு வயது மாணவர் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 24 வயது ஆசிரியர் தொடர்பான விசாரணை அறிக்கை, அடுத்த வாரம் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பகாங் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் (Datuk Azry Akmar Ayob) கூறுகையில், விசாரணையை முழுமைப்படுத்த ஆசிரியரின் செயல்திறன் அறிக்கையை மாவட்டக் கல்வி அலுவலகத்திடமிருந்து (PPD) போலீசார் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ஆசிரியர் ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பள்ளியின் கணினி ஆய்வகத்தில் மாணவரைப் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அக்டோபர் 27ஆம் தேதி மாணவர் குடும்பத்தினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தற்போது ஆசிரியர் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஒரே ஒரு புகார் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், வேறு பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இவ்வழக்கு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.



