
கோலாலம்பூர், நவம்பர்-23,தேசிய விளையாட்டுத் துறைக்கு நேற்று ஒரு பொன்னான நாளாக அமைந்துள்ளது.
ஸ்குவாஷ் மற்றும் பூப்பந்து போட்டிகளில் மலேசிய வீரர்கள் 3 சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சீன பொது விருது ஸ்குவாஷ் போட்டியில், நாட்டின் முன்னணி வீராங்கனை எஸ். சிவசங்கரி மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இறுதிப் போட்டியில் அவரை எதிர்கொள்ளவிருந்த ஜப்பானின் சடோமி வத்தனாபே, உடல்நலக் குறைவால் விலகியதைத் தொடர்ந்து சிவசங்கரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே, ஹோங் கோங் பொது விருது பூப்பந்து போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் பெர்லி தான் – எம். தீனா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஜப்பானிய ஜோடியை 22-20, 21-16 என்ற புள்ளிகளில் வீழ்த்திய அவர்கள், மலேசியாவின் 26 ஆண்டுகால காத்திருப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் மலேசியாவின் மான் வெய் சோங் – தீ காய் வுன் (Man Wei Chong-Tee Kai Wun) ஜோடி, இந்தோனேசிய ஜோடியை 21-19, 21-18 என்ற புள்ளிகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
ஒரே நாளில் கிடைத்த இந்த மூன்று வெற்றிகளும் மலேசிய விளையாட்டு இரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.



