
கோலாலம்பூர், நவம்பர்-22 – பொருள் மற்றும் சேவை வரியான GST முறையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு பாரிசான் நேஷனல் கூட்டணி உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மீண்டும் புத்ராஜெயாவில் ஆட்சியைக் கைப்பற்றினால், GST வரியை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.
தற்போதைய விற்பனை மற்றும் சேவை வரியான SST முறையைக் காட்டிலும், GST வரி மிகவும் நியாயமானதும் இலக்கை அடிப்படையாகக் கொண்டதுமான வரிவிதிப்பு முறையாக இருக்கும் என்றார் அவர்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ம.சீ.ச கட்சியின் 30-ஆவது பொதுப் பேரவையில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், GST முறையை மீண்டும் கொண்டுவருவது SST முறையை நிராகரிப்பதற்காக அல்ல என்றும், நாட்டிற்கு மிகவும் சமமான வரிவிதிப்பு முறையை உருவாக்குவதே நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
GST முறையை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என மடானி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய SST முறையையே மேம்படுத்தும் அணுகுமுறையைப் பின்பற்றுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.



