
கோலாலம்பூர், ஜூன்-21-AI அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் தூய மற்றும் பாரம்பரிய தமிழ்ப் பெயர்களைத் தேர்வு செய்ய உதவும் ‘TamilName.com’ இணையத்தளம், கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள சோமா அரங்கில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டுள்ளது.
மலேசியத் தொழில்நுட்ப வல்லுநர்களான சி.ம. இளந்தமிழ் மற்றும் முகிலன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த இணையத் தளம், சோதிடம், எண் கணிதம் மற்றும் தமிழ் மரபு நெறிமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளுக்குச் சிறந்த பெயர்களைச் சூட்ட உதவுகிறது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 70,000-க்கும் மேற்பட்ட பெயர்களை அவற்றின் வரலாற்றுப் பின்னணியோடு இது வழங்குகிறது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டத்தோ பி. சகாதேவன் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய டத்தோ ஸ்ரீ சரவணன், அடுத்த தலைமுறைக்குத் தமிழ் அடையாளத்தைக் கொண்டு சேர்க்கும் இந்த அரிய முயற்சியைப் பாராட்டிப் பேசினார்.
இந்த இணையத் தளம் உருவான கதை குறித்து வணக்கம் மலேசியாவிடம் விளக்கினார் இளந்தமிழ்…
இந்த இணையத் தளம் மற்றும் கைப்பேசி செயலியின் பயன்பாடு குறித்தும் அவர் மேலும் பேசினார்.
இது உலகிற்கான மலேசியத் தமிழர்களின் பங்களிப்பு என வருணித்த இளந்தமிழ், இதற்கு உள்ளூர் தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரின் ஆதரவும் பாராட்டும் கிடைத்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த வசதியைப் பயன்படுத்தி தமிழ் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் தூயத் தமிழில் பெயர் வைப்பார்கள் என்றும் இளந்தமிழ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வேளையில், நமது 5,000 ஆண்டுகாலப் பண்பாட்டு வேர்களை, AI தொழில்நுட்பத்தோடு இணைக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என, டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.
நம் மொழியைக் காப்பதும், அதன் தூய்மையைப் பேணுவதும் நமது இன்றியமையாத கடமைகளுள் ஒன்று என்றார் அவர்.
இந்த Tamilname.com செயலி அறிமுக விழாவில், பிரமுகர்கள், கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், பொது மக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.



