
ஐச்சி, செப்-28-Aichi-Nagoya 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் பூப்பந்தில் மகளிர் இரட்டையர் பிரிவில் நாட்டின் பெர்லி டான்-எம். தீனா இணை வெண்கலப் பதக்கம் வென்றது. அரையிறுதியில் சீனாவைச் சேர்ந்த உலகின் முதல் நிலை ஜோடியான Liu Sheng Shu-Tan Ningங்கிடம் அவர்கள் தோல்வி அடைந்தனர்.
உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள பெர்லி டான்-எம். தீனா, 85 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் முதல் செட்டில் 21-16 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். எனினும், இரண்டாவது செட்டில் 20-22 என தோல்வியுற்றனர். மூன்றாவது செட்டிலும் அவ்விருவரும் வீழ்ந்து இறுதியில் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
அத்தோல்வியின் மூலம், 1962 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பூப்பந்து அறிமுகமானதிலிருந்து, மகளிர் இரட்டையர் பிரிவில் இறுதியாட்டத்திற்கு முன்னேறும் முதல் மலேசிய ஜோடி என்ற வாய்ப்பை பெர்லி டான்-எம். தீனா இழந்தனர். இதுவரை மலேசியாவின் சிறந்த சாதனை மூன்று வெண்கலப் பதக்கங்களாகும்.
ஏற்கனவே பெர்லி டானும் எம். தீனாவும் அந்தச் சீன இணையுடன் 14 முறை மோதியுள்ளனர். அவற்றில் Liu Sheng Shu- Tan Ning 11 முறை வெற்றி பெற்றுள்ளனர். தேசிய ஜோடி மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதனிடையே முக்கியமான தருணங்களில் போதிய நிதானத்தை கடைப்பிடிக்காததே தோல்விக்கு காரணமாக அமைந்ததாக பெர்லி டான் தெரிவித்தார். அதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டு, அடுத்தடுத்தப் போட்டிகளில் இன்னும் வலிமையுடன் திரும்புவோம் என எம். தீனா கூறினார்.



