
சுங்கைப் பட்டாணி, அக்டோபர்-13,ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 781 மாணவர்களுக்கு, ம.இ.காவின் கல்விக் கரமான MIED நிறுவனம், சுமார் 13 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகாரச் சம்பளம் வழங்குகிறது.
நேற்று நடைபெற்ற MIED Care கல்வி உபகாரச்சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில், அதன் தலைவரும் AIMST பல்கலைக்கழக வேந்தரும் ம.இ.கா தேசியத் தலைவருமான தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தமதுரையில் அறிவித்தார்.
இதில் மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் 543 மாணவர்களுக்கு 10.5 மில்லியன் ரிங்கிட்டும், Foundation அடிப்படைக் கல்வி பயிலும் 238 மாணவர்களுக்கு சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு 790-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 3 கட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.
கல்வி வாய்ப்புகள் இன, மத, அரசியல் வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே MIED-யின் நோக்கமாகும் என விக்னேஸ்வரன் தமதுரையில் கூறினார்.
இதற்கு அடித்தளமாக விளங்கியது கட்சியின் அன்றையத் தலைவர் தான் ஶ்ரீ மாணிக்கவாசகத்தின் தூர நோக்குப் பார்வையில் 50 ஆண்டுகளுக்கு முன் உதித்த ம.இ.கா கல்வி நிதி என்பதையும் விக்னேஸ்வரன் நினைவு கூர்ந்தார். ம.இ.கா உறுப்பினர்களின் ஒரு ரிங்கிட் பங்களிப்பில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அந்த நிதியே பின்பு துன் சாமிவேலுவின் தலைமத்துவத்தின் கீழ் MIED என உருமாற்றம் கண்டதாக அவர் கூறினார்.
அப்படி உருவான MIED இன்றுவரை ஏறக்குறைய 15 ஆயிரம் மாணவர்களுக்கு 240 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் கடனுதவிகளை வழங்கியுள்ளது என்றார் அவர்.
“இன்று MIED உங்கள் மீது முதலீடு செய்கிறது. நாளைப் படித்துப் பட்டம் பெற்றதும் பிற மாணவர்களுக்கு நீங்கள் உதவ முன்வர வேண்டும்”_ என்ற முக்கியச் செய்தியையும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
இதனிடையே, சமூகத்தின் நலன் மற்றும் மேம்பாடு கருதி AIMST பல்கலைக்கழத்திற்கு வருடாந்திர நிதி ஒதுக்கீடு செய்துள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, MIED சார்பில் விக்னேஸ்வரன் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். பிரதமர் வழங்கி வரும் ஆதரவும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது என்றார் அவர்.
கல்வி நிதிஉதவி பெற்ற மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்த்து கொண்டனர்.
கல்வி வழி இந்தியச் சமூக முன்னேற்றம் எனும் தாரக மந்திரத்தோடு செயல்பட்டுவரும் AIMST பல்கலைக்கழகத்தில் தங்களின் மேற்கல்வியைத் தொடர மேலும் அதிகமான மாணவர்களும் பெற்றோர்களும் இந்த உபகாரச் சம்பள வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திகொள்ள முன்வர வேண்டும் என விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.



