
மணிலா, அக்டோபர்-28,
கடந்த ஓராண்டில் படுமோசமான வெப்பமண்டல புயலைச் சந்தித்த சில நாட்களிலேயே, பிலிப்பின்ஸ் நாட்டில் மற்றொரு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22-ல் அந்த தீவு நாட்டை தாக்கிய Trami வெப்பமண்டல புயலில் 116 பேர் பலியான வேளை, 39 பேரைக் காணவில்லை.
புயல் சூறாவளியாக வலுப்பெற்றதால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வீடுகளை இழந்த சுமார் 10 லட்சம் மக்கள், இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று Kong-rey புயல் தாக்கவிருப்பதாக, பிலிப்பின்ஸ் வானிலை ஆராய்ச்சித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அடுத்த சில மணி நேரங்களில் கனமழையும் புயல் காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்படும்.
வெப்பமண்டல புயலிலிருந்து செவ்வாய்க்கிழமை வாக்கில் சூறாவளியாக Kong-rey வலுப்பெற்று, புதன்கிழமையன்று வட பிலிப்பின்ஸ் தீவுகளை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பின்சை ஆண்டுதோறும் குறைந்தது 20 புயல்களும் சூறாவளிகளும் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்துவது வழக்கமாகும்.