பெட்டாலிங் ஜெயா, மே 6 – ரோட் டெக்ஸ் எனப்படும் சாலை வரியை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, BJAK நிறுவனத்திற்கு, JPJ –சாலை போக்குவரத்து துறையோ, போக்குவரத்து அமைச்சோ இதுவரை அனுமதி எதையும் வழங்கவில்லை.
அதனால், BJAK நிறுவனத்தின் அகப்பக்கத்திலும், சமூக ஊடகங்களிலும், தனது சாலை வரியை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும், சாலை போக்குவரத்து துறையால் தணிக்கை செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளதில் உண்மையில்லை. அது பொதுமக்களை குழப்பும் ஒரு செயல் என JPJ ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.
BJAK நிறுவனத்தின் அச்செயலை சாலை போக்குவரத்து துறை கடுமையாக கருதுகிறது.
அந்த சேவைக்காக BJAK நிறுவனம் விதிக்கும் கூடுதல் கட்டணம் குறித்தும், பல சமயங்களில் தங்களின் சாலை வரியை BJAK நிறுவனம் முறையாக புதுப்பித்து தர தவறியது குறித்தும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் கிடைத்துள்ளதாக சாலை போக்குவரத்து துறை கூறியுள்ளது.
BJAK நிறுவனம் மற்றும் சாலை போக்குவரத்து துறையின் சேவைகளை ஒருங்கிணைக்கும் முறை எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதோடு, அதுபோன்ற சேவைக்கு, சாலை போக்குவரத்து துறை அங்கீகாரம் எதையும் வழங்கவும் இல்லை என அது தெளிவுப்படுத்தியது.
அதனால், சாலை வரியை புதுப்பிக்க விரும்பும் பொதுமக்கள் JPJ முகப்புகள், JPJ பட்டுவாடா இயந்திரங்கள், JPJ நடமாடும் சேவை மையங்கள், செயலிகள், ஆன்லைன் அகப்பக்கங்கள் வாயிலாக அல்லது அதன் முதன்மை வர்த்தக பங்காளிகளான போஸ் மலேசியா, MyEG அல்லது PUSPAKOM சேவைகளை நாடலாம்.