Latestமலேசியா

டீசல் மானியச் சீரமைப்பு: ஆண்டுக்கு RM2 பில்லியன் மிச்சப்படுத்த அரசு இலக்கு; BUDI95 ஒதுக்கீடு நீடிப்பு

புத்ராஜெயா, ஜூன்-23-எரிபொருள் மானியக் கசிவைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் புத்தம் புதிய BUDI Diesel திட்டத்தின் மூலம், அரசாங்கம் ஆண்டுக்கு 2 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க எதிர்பார்க்கிறது.

இரண்டாவது ​நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அஜிசான் அவ்வாறுக் கூறினார்.

வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் MyKad சரிபார்ப்பு முறை மூலம், தகுதிப்பெற்ற 700,000 தனியார் டீசல் வாகன உரிமையாளர்களுக்கு ஒரு லிட்டர் டீசல் 2 ரிங்கிட் 10 சென் என்ற மானிய விலையில் வழங்கப்படும் என்றார் அவர்.

இதற்கான ஆரம்பகட்ட பதிவு ஜூன் 27 முதல் தொடங்குகிறது.

இந்த Budi MADANI Diesel திட்டத்தின் கீழ், டீசல் வகை பிக்-அப் ட்ரக்குகள் மற்றும் ஜீப் இரக வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களின் மாதாந்திர மானிய டீசல் ஒதுக்கீட்டை மேலும் 100 லிட்டர் கூடுதலாகப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் அவர்களின் மொத்த மாதாந்திர ஒதுக்கீடு 300 லிட்டராக உயரும்; ​சிறு மற்றும் நடுத்தர நடுத்தர தொழில்துறையினர் (SME) மற்றும் தங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அதிகளவில் எரிபொருள் தேவைப்படும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அமீர் ஹம்சா விளக்கினார்.

​இதனிடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் தாக்கங்களை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதால், BUDI95 திட்டத்தின் கீழான மாதாந்திர பெட்ரோல் ஒதுக்கீடு தற்போதைக்கு 200 லிட்டராகவே நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்காசியாவில் நிலவும் போர்நிறுத்தச் சூழல் மற்றும் அனைத்துலகச் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த ஒதுக்கீட்டை பழையபடி 300 லிட்டராக உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்.

இந்த ஒதுக்கீடு 300 லிட்டரிலிருந்து குறைக்கப்பட்டாலும், வாகனமோட்டிகளால் இதனைச் சமாளிக்க முடிகிறது.

மேலும், BUDI95 மானியம் பெறுபவர்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் மாதத்திற்கு 200 லிட்டருக்கும் குறைவாகவே பெட்ரோல் பயன்படுத்துகின்றனர் என்றும், ‘வீட்டிலிருந்தே வேலை செய்யும்’ நடைமுறைகள் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க மேலும் உதவும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!