
சங்லுன், ஜூலை-21- கெடா, சங்லுன் (Changlun) நீர்வீழ்ச்சியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கால், 5 சிறார்கள் உட்பட 12 பேர் ஆற்றின் அக்கரையில் சிக்கிக் கொண்டனர்.
கனமழைக்குப் பிறகு ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால், 4 குடும்பங்களைச் சேர்ந்த அவர்களால் மீண்டும் ஆற்றைக் கடக்க முடியவில்லை.
தகவல் கிடைத்து இரவு 8 மணிக்கு மேல் சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறை, கயிற்றைப் பயன்படுத்தி 12 பேரையும் பாதுகாப்பாக இக்கரைக்குக் கொண்டு வந்தது.
அப்போது நீர் மட்டம் குறைந்திருந்ததால், யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.