
நியூயார்க், செப்.24-‘Custom Feeds’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு AI அம்சத்தை YouTube அறிமுகப்படுத்தியுள்ளது. தனது முகப்புப் பக்கத்தில் வீடியோ பரிந்துரைகளைப் பயனர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்தும் வகையில் அந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.
‘Made on YouTube 2026’ நிகழ்வில் அறிவிக்கப்பட்ட அவ்வசதி மூலம், பயனர்கள் தங்களது ஆர்வங்கள், அன்றாடப் பழக்க வழக்கங்கள் அல்லது குறிப்பிட்ட சூழல்களுக்கு ஏற்ப பார்க்க விரும்பும் உள்ளடக்கத்தை விவரிக்க எழுத்துப்பூர்வமாக கட்டளை கொடுக்கலாம்.
LLM எனும் பெரிய மொழி மாதிரி அடிப்படையிலான AI அமைப்பு அந்தக் கட்டளைகளைச் செயல்படுத்தி, புதிய பரிந்துரைகளுடன் தானாகப் புதுப்பிக்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட வீடியோக்களை உருவாக்கும்.
பயனர்கள் வெவ்வேறு தலைப்புகள், தனிப்பட்ட ஆர்வங்கள் அல்லது குறிப்பிட்ட உள்ளடக்க உருவாக்குநர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல ‘Custom Feeds’களை உருவாக்கிச் சேமிக்க முடியும். ஒவ்வொரு Feedsகளையும் YouTube முகப்புப் பக்கத்தில் தனித்தனியான வகையில் காண முடியும்.
இந்த வசதி மூலம் புதிய தலைப்புகள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களைக் கண்டறிவதை எளிதாக்குவதே YouTubeப்பின் நோக்கமாகும். இவ்வசதி இவ்வாண்டு அமெரிக்காவில் கைபேசி, desktop மற்றும் டிவி செயலிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மலேசியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கான வெளியீட்டு கால அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.



