
கோலாலம்பூர், ஜூன்-8-எதிர்வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் DAP கட்சியுடன் இணைந்து செயல்படவோ அல்லது ஒரே மேடையில் அமரவோ போவதில்லை என ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி கூறிய கருத்துக்கு, DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது ஃபேஸ்புக் பதிவில் ஓன் ஹஃபிஸை சாடிய அந்த போக்குவரத்து அமைச்சர், ஜோகூர் மந்திரி பெசாரின் இந்த நிலைப்பாடு ஆணவமிக்கது என்றும், தற்போதைய அரசியல் யதார்த்தத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புத்ராஜெயாவில், ஒவ்வொரு வாரமும் நடக்கும் ஒற்றுமை அரசாங்க அமைச்சரவைக் கூட்டங்களில், அம்னோ தலைவரான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹித் ஹாமிடி தமக்கு அருகில்தான் அமர்கிறார் என்பதை ஓன் ஹஃபிஸிற்கு அந்தோணி லோக் நினைவூட்டினார்.
முன்னதாக, ஜோகூர் பாரிசான் தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் விழாவில் பேசிய ஓன் ஹஃபிஸ், DAP கட்சியுடன் கூட்டு சேருவதை விட, தாம் எந்தப் பதவியும் இல்லாமல் இருப்பதே மேல் என பேசியிருந்தார்.
ஜோகூர் அரசியல் சூழல் வேறுபட்டது என்றும், மாநிலத்தின் நிலைத்தன்மைக்காகவே அனைத்து 56 தொகுதிகளிலும் BN தனித்துப் போட்டியிட விரும்புவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
வெளிப்படையான இந்த மோதல், 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



