Hormuz நீரிணையை மூடியதாக ஈரான் அறிவிப்பு; மறுப்பு தெரிவிக்கும் அமெரிக்கா

தெஹ்ரான், ஜூன்-21,
அனைத்துலகக் கடல் வணிகத்தின் முக்கிய பாதையான Hormuz நீரிணையை மீண்டும் முழுமையாக மூடுவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கையின்படி, லெபனானில் இஸ்ரேல் உடனடி போர்நிறுத்தத்தை அமுல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்க ஈரான் தனது கடல்வழி எல்லையை மூடி அச்சுறுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் தூதர்கள் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் அதே வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Hormuz நீரிணை முடக்கப்பட்டால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், அனைத்துலகச் சந்தையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
எனினும் அமெரிக்கத் தரப்பிலோ, மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டு, Hormuz நீரிணையில் கப்பல் போக்குவரத்து சுமூமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அது கூறிக் கொண்டது.



