
வாஷிங்டன், ஏப்ரல்-24-Hormuz நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலையும் கண்டதும் ‘சுட்டு வீழ்த்துமாறு’ அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனது Truth Social சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஈரான் குறைந்தது 20 அதிநவீன GPS கண்ணிவெடிகளை இப்பகுதியில் புதைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அங்குக் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மும்மடங்கு அதிகரிக்கவும் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் ஈரான் படைகளால் இரண்டு வணிகக் கப்பல்கள் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் போக்கு வலுத்துள்ளது.
Hormuz நீரிணையை முழுமையாகச் சீரமைக்க 6 மாதங்கள் வரை ஆகலாம் என அமெரிக்கத் தற்காப்பு அமைச்சான Pentagon எச்சரித்துள்ள நிலையில், இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஈரானுடன் அரச தந்திர உடன்பாடு எட்டப்படும் வரை, Hormuz நீரிணை அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், கடல் பாதை மிகவும் பாதுகாப்பாக சீல் வைக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.



