
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18-அம்பாங்கில் ‘Hungry Ghost Festival’ விழா தொடர்பான பதாகைகள் சீன மொழியில் மட்டும் இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய மத போதகர் ரிடுவான் தீ அப்துல்லாவுக்கு, பி.கே.ஆரைச் சேர்ந்த லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் Syed Ahmad Abdul Rahman Alhadad கண்டனம் தெரிவித்துள்ளார்.
கலாச்சார வேறுபாடுகளை இனப் பதற்றமாக மாற்ற வேண்டாம் என ‘அல்டிமேட்’ (Altimet) என பரவலாக அழைக்கப்படும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, தாமான் கோசாஸ் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் தேசிய மொழியான மலாய் மொழி இடம்பெறாததை சுட்டிக்காட்டி ரிடுவான் தீ கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த Altimet, இது முன்னோர்களை நினைவுகூரும் பாரம்பரிய கலாச்சார நிகழ்வு என்பதால், குறிப்பிட்ட சமூகத்தை நோக்கமாகக் கொண்ட பதாகைகளில் அவர்களின் மொழி பயன்படுத்தப்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல என்றார்.
ஊராட்சி மன்ற வழிகாட்டுதல்களின்படி தேசிய மொழி மதிக்கப்பட வேண்டும் என்றாலும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை சரிசெய்ய வேண்டுமே தவிர, இன விவகாரமாக ஊதிப் பெரிதாக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
சமூக வலைத்தள கவன ஈர்ப்புக்காக வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தாமல், பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் Altimet வலியுறுத்தினார்.



