
கிள்ளான், ஆகஸ்ட்-18-போர்ட் கிள்ளானில் ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, 24 வயது இளைஞர் ஒருவர் வரும் வியாழக்கிழமை கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளார்.
ஷா ஹிஸாம் (Shah Hizam) என்ற அந்த இளைஞருக்குக் கால்நடை மருத்துவச் சேவைத் துறை நீதிமன்ற அழைப்பாணை விடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள நிலையில், அவர் மீது எந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜூலை 29-ஆம் தேதி கிள்ளான் அரச மாநகர மன்றமான MBDK-வின் நாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பொது மக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனினும், விலங்குகளைத் துன்புறுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், குடியிருப்பாளர் பிரதிநிதியாகவே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் முன்னதாக விளக்கமளித்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து 2015-ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் கீழ் விலங்கு வதை தடுப்புப் பிரிவில் ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



