புத்ராஜெயா, ஏப்ரல் 5 – தனது மகளை கண்டுபிடித்து தரத் தவறியதற்காக, தேசியப் போலீஸ் படைத் தலைவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கை தொடங்குவதற்காக, பாலர் பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தி செய்திருந்த மனுவை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரசன்னா டிக்சாவை கண்டுபிடித்து தர தேசிய போலீஸ் படைத் தலைவரை கட்டாயப்படுத்தும் உத்தரவை, 2016-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் கட்டுப்படுவதாக, மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இன்று அறிவித்தது.
பிரசன்னா டிக்சாவின் பராமரிப்பு தொடர்பில், சிவில் நீதிமன்றமும், ஷாரியா நீதிமன்றமும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
பிரச்சனாவின் பராமரிப்பு உரிமையை சிவில் நீதிமன்றம் இந்திராகாந்திக்கு வழங்கியுள்ள வேளை ; ஷாரியா நீதிமன்றம் பிரசன்னாவின் தந்தையான முஹமட் ரிடுவான் அப்துல்லாவிற்கு வழங்கியுள்ளதே, 2016-ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கான காரணம் என நீதிபதி தெளிவுப்படுத்தினார்.
அதனால், அரசாங்கத்திற்கு செலவுத் தொகையாக, இந்திரா காந்தி பத்தாயிரம் ரிங்கிட் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.
2009-ஆம் ஆண்டு இந்திரா காந்தியிடமிருந்து பிரசன்னாவை வழுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ரிடுவான், அவர்களின் மூன்று பிள்ளைகளையும் ஒருதலைபட்சமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்.
எனினும், அந்த ஒரு தலைபட்சமான மதமாற்றம் செல்லாது என பின்னர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.