ஜொகூர் பாரு, மே-18 – JI எனப்படும் Jemaah Islamiyah கும்பலின் நடவடிக்கை நாட்டில் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது.
எனவே பெரிதாக அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் உத்தரவாதம் அளித்தார்.
அப்படியே அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் திறன் போலீசிடம் உள்ளது.
ஜொகூர், உலு திராமில் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்டது போன்ற தாக்குதல்களைக் கையாள, போலீஸ் வசம் போதுவான தரவுத் தளங்கள் இருப்பதாக அமைச்சர் சொன்னார்.
அத்தரவுத் தளங்களில் உள்ள தகவல்களின் உடனடி பரிமாற்றம் வாயிலாக இது போன்ற சம்பவங்களில் போலீசார் துப்பறிந்து சந்தேக நபர்களை விரைந்து அடையாளம் காண்பர் என்றார் அவர்.
பொது அமைதிக் காப்பே அமைச்சின் முக்கியப் பணி; அதனை செவ்வனே செய்திட பொது மக்கள், ஊடகங்கள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பும் முக்கியம்.
எனவே, இந்த உலு திராம் தாக்குதல் சம்பவத்தை எந்தவொரு மதத்துடனும் தொடர்புப்படுத்துவது உள்ளிட்ட தேவையற்ற யூகங்களை கிளப்ப வேண்டாம் என டத்தோ ஸ்ரீ சைஃபுடின் கேட்டுக் கொண்டார்.
உலு திராம் போலீஸ் நிலையத்தில் வெறித் தாக்குதல் நடத்தி, 2 போலீஸ்காரர்களைக் கொன்று, மேலுமொருவரைக் காயப்படுத்திய இளைஞன் JI கும்பலைச் சேர்ந்தவன் என முன்னதாக அடையாளம் காணப்பட்டது.
எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல் தானாகவே அத்தாக்குதலில் இறங்கியதாகக் கூறப்படும் 21 வயது அவ்வாடவன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.