
கோலா திரங்கானு, ஆகஸ்ட்-25-திரங்கானு, Manir, Kampung Jeram பகுதியில் சுற்றித் திரிந்த பெண் யானை, இன்று காலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. திரங்கானுவின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN அந்நடவடிக்கையை மேற்கொண்டது.
காலை 8.00 மணியளவில் திரங்கானு PERHILITANனைச் சேர்ந்த 13 பணியாளர்கள், Sungai Deka யானை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த எழுவர், Kuala Gandah தேசிய யானை பாதுகாப்பு மையத்தின் இரு பணியாளர்கள் என மொத்தம் 22 பேர் அப்பணியில் ஈடுபட்டதாக மாநில PERHILITAN இயக்குனர் Dennis Ten தெரிவித்தார்.
அந்தப் பெண் யானை பாதுகாப்பாக, சீரான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டது. அது லாரியில் ஏற்றப்பட்டு, பேராக் மாநிலத்தில் உள்ள Royal Belum மாநிலப் பூங்காவில் விடுவிப்பதற்காகக் கொண்டுச் செல்லப்பட்டது.
Manir, Kampung Jeram பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்தப் பெண் காட்டு யானை சனிக்கிழமை வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



