
கோலாலம்பூர், செப்.18-பஹாங், ரவூப் பகுதியில் உள்ள Klau அணையில் அண்மையில் பிடிபட்ட மீனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், பிரன்ஹா மீன் வகையான Pygocentrus பேரினத்தின் உடலமைப்பு அம்சங்களுடன் ஒத்துப் போவதாக மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
நெகிரி செம்பிலானின் Glami Lemi மீன்வள ஆராய்ச்சிக் கழகத்தின் தொழில்நுட்ப மதிப்பீட்டின் அடிப்படையில் இது தெரிய வந்ததாக மீன்வளத் துறை தலைமை இயக்குநர் Datuk Adnan Hussain தெரிவித்தார். எனினும், அம்மீன் தூக்கி எறியப்பட்டு விட்டதால் அதன் துல்லியமான இனத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என அவர் கூறினார்.
இதுவரை Klau அணைப் பகுதியில் அத்தகைய ஒரு மீன் மட்டுமே பிடிபட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேறு மீன்கள் பிடிபட்டதாகவோ பாதுகாப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாகவோ பதிவாகவில்லை. அணையில் பிரன்ஹா மீன்கள் நிரந்தரமாக வாழ்வதற்கோ இனப்பெருக்கம் செய்வதற்கோ ஆதாரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் ஆக்கிரமிப்பு மீன் இனங்களை பொது நீர்நிலைகளில் விடுவது உள்ளூர் நீர்வாழ் சூழலமைப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் Adnan Hussain எச்சரித்தார்.
புதிய வகை மீன்கள் என சந்தேகம் ஏற்பட்டால், அதை மீண்டும் நீரில் விட வேண்டாம். அந்த மீன் நல்ல நிலையில் இருந்தால், அதை அருகிலுள்ள மீன்வளத் துறை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
Klau அணையில் பிரன்ஹா வகையைச் சேர்ந்த மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக முன்னதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அது குறித்து பகாங் மாநில மீன்வளத் துறை விசாரணை நடத்தி வருவதாக ஊடகச் செய்திகள் கூறியது குறிப்பிடத்தக்கது.



