
சிப்பாங், ஆகஸ்ட்-19- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA1றில் முனையம் 1றில் பயணிகளுக்கு இடையூறாக இருந்து பரபரப்பை ஏற்படுத்திய சீனப் பெண் சுற்றுப் பயணி ஒருவர் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான அப்பெண் நேற்று பிற்பகலில் புறப்பாடு மண்டபத்தில் மாண்டரின் மொழியில் கூச்சலிட்டு, ஓடியும் பாடியும் ஆடியும் பிற பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக KLIA காவல் துறைத் தலைவர் ரவி முனுசாமி தெரிவித்தார். அவரைக் கட்டுப்படுத்திய முனையப் பாதுகாப்புப் பணியாளர்கள், மேல் நடவடிக்கைக்காகக் காவல் நிலையத்திற்குக் கொண்டுச் சென்றனர்.
அப்பெண் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நண்பருடன் மலேசியா வந்ததும், ஆகஸ்ட் 18-ஆம் தேதி சீனாவுக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்ததும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததற்கான அறிகுறிகளும் இல்லை. மேல் சிகிச்சைக்காக அப்பெண் காஜாங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அச்சம்பவம் குறித்து சீனத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரவி கூறினார்.
அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



