
புத்ராஜெயா, செப்-02- பொதுமக்களிடையே கவலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ‘Madu atau Racun’ என்ற நாடகம் ஒளிபரப்பப்படுவதை பிரதமர் துறையின் சமய விவகார அமைச்சு நிராகரித்துள்ளது. அந்நாடகத்தில் மத உணர்வுகள் மற்றும் உள்ளூர் கலாச்சார நெறிமுறைகளைப் பாதிக்கும் வகையிலான அம்சங்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இருப்பதை அமைச்சர் Zulkifli Hasan சுட்டிக் காட்டினார்.
சமூகத்தின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் நம்பிக்கையையும் தார்மீகப் பண்புகளையும் பாதுகாக்க, இஸ்லாமிய போதனைகள் மற்றும் கிழக்கத்திய கலாச்சார நடைமுறைகளுக்கு முரணான அம்சங்கள் சேர்க்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகள் குடும்ப அமைப்பின் புனிதத்தன்மையையும் மத வாழ்க்கையின் கண்ணியத்தையும் வலியுறுத்துகின்றன. தவறான வாழ்க்கை முறைகளைச் சித்தரிப்பது அவற்றுக்கு எதிர்மறையாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனவே மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (JAKIM), இஸ்லாமிய கருப்பொருளைக் கொண்ட ஒளிபரப்பு உள்ளடக்கங்களை ஆய்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின் அடிப்படையில், உள்ளடக்கங்களை ஆய்வு செய்யவும் தகுந்த மேல்நடவடிக்கைகளை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படவிருக்கிறது.
இதனிடையே கலைத் துறையும் ஊடகத் தளங்களும் சமூக நெறிமுறைகளையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கக்கூடிய சர்ச்சைகளைத் தூண்டுவதற்குப் பதிலாக, நற்பண்புகளை விதைக்கும் தளங்களாகப் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், மதத்தின் புனிதத்தன்மையையும் தார்மீக நேர்மையையும் உறுதியுடனும் விவேகத்துடனும் நிலைநிறுத்த முஸ்லீம் சமூகம் கடப்பாடு கொண்டிருக்க வேண்டும் என Zulkifli வலியுறுத்தினார்.



