கோலலம்பூர், ஏப் 23 – MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி
பெரிக்காதான் நேஷன்ஸ் லில் புதிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று மாலை பெரிக்காத்தான் நேசனலின் உச்சமன்ற கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக பெரிக்காத்தான் நேஷனலின் தலைவர் முஹிடின் யாசினிடமிருந்து உறுப்புக் கட்சிக்கான கடிதத்தை MIPP பெற்றதாக MIPP தலைவர் P. Punithan தெரிவித்தார்.
இதனிடையே MIPP கட்சியை ஏகமனதாக அங்கீகரித்த மற்றும் உறுப்புக் கட்சியாக ஏற்றுக்கொண்ட முஹிடின் யாசின் மற்றும் பெரிக்காத்தான் நேஷனலின் இதர தலைவர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் புனிதன் கூறியுள்ளார்.
வரலாற்றில் பின்னோக்கிப் பார்த்தால், 1954ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியர்கள் அடிப்படையிலான ஒரு கட்சி பெரிக்காதான் கூட்டணியில் இணைந்தது.
இப்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய இந்தியர் மக்கள் கட்சி
பெரிக்காதான் நேஷனல் கூட்டணியில் உறுப்பு கட்சியாக இணைந்து தேசிய அரசியல் அரங்கில் புதிய வரலாறு படைத்திருப்பதாக புனிதன் வருணித்திருக்கிறார்.
இது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, இந்த நாட்டில் மூன்றாவது பெரிய இனமாக இருக்கும் இந்தியர்களுக்கு பெரிக்காதான் நேஷனல் முன்னுரிமை அளிக்கிறது என்ற தெளிவான செயல் இது என அவர் கூறினார்.
தேசிய வளர்ச்சியின் நீரோட்டத்தில் இந்தியர்கள் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய சமூகத்தின் குரல் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரல், MIPPயால் வழிநடத்தப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படும் என புனிதன் தெரிவித்தார்.
இதனிடையே, பெரிக்காதான் நேஷனல் கூட்டணியில், பெர்சத்து, பாஸ், கெராக்கான், SAPP ஆகிய கட்சிகள் ஏற்கனவே இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.