கோலாலம்பூர், ஜூன் 27 – புத்ராஜெயாவிலுள்ள, MOTAC எனப்படும் சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சரின் அலுவலகத்திற்கு, வெடிபொருள் போல பொருட்கள் நிரப்பப்பட்ட பொட்டலத்தை அனுப்பியதாக நம்பப்படும் ஆடவனை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
அந்த பொட்டலம் அனுப்பப்பட்ட அதே நாளில், சிலாங்கூர், சுங்கை பூலோவிலுள்ள, பொருள் விநியோக நிறுவனத்தின் அலுவலகத்தில், முகக்கவசம் அணிந்திருந்த சந்தேக நபரின் படம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சிவப்பு சட்டை மற்றும் கருப்பு ஜாக்கெட் அணிந்திருந்ததோடு, தலையில் கருப்பு தொப்பி அணிந்திருந்ததாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
அவ்வாடவன், மற்றொரு நபரின் அடையாளத்தை பயன்படுத்தி, பொருள் விநியோக சேவையை மேற்கொண்டதும், விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, ருஸ்டி சொன்னார்.
அவ்வாடவன் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், உடனடியாக புத்ராஜெயா அல்லது கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இம்மாதம் ஐந்தாம் தேதி, காலை மணி 11.19 வாக்கில், புத்ராஜெயாவிலுள்ள, சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சரின் அலுவலகத்திற்கு, வெடி மருந்துகளை ஒத்த பொருட்கள் நிரப்பப்படிருந்த பொட்டலம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.