
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் -22, இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மடானி அரசாங்கம் மேலுமொரு புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
அப்புதிய முன்னெடுப்பு குறித்து விரைவிலேயே அறிவிக்கப்படுமென தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவ்வமைச்சின் கீழ் இந்தியர்களுக்காக ஏற்கனவே Tekun Nasional-லின் கீழ் SPUMI GOES BIG திட்டம், Bank Rakyat கீழ் BRIEF-i இந்தியத் தொழில்முனைவோர் திட்டம், அமானா இக்தியார் மலேசியா நிறுவனத்தின் கீழ் தொடங்கப்பட்ட ‘பெண்’ (P.E.N.N) திட்டம் ஆகியவை வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பித்தக்கது.
சிலாங்கூர் – கூட்டரசு பிரதேச மலையாளிகள் சங்க (SFMT) ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக நடைபெற்ற ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடந்தேறிய 2024 ஓணம் வண்ணலோ என்ற அந்நிகழ்வில் மலையாள சமூகத்தினரோடு மற்ற இந்திய வம்சாவளியினர் மட்டுமின்றி, மலாய்-சீன நண்பர்களும் நிகழ்வில் பங்கேற்றது மலேசியர்களின் ஒற்றுமை உணர்வைப் புலப்படுத்துவதாக இருந்ததாக டத்தோ ரமணன் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆதரவு நல்கிய பேங் ராக்யாட்டுக்கும் (Bank Rakyat) அவர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
மலேசியாவுக்கான இந்தியத் துணை உயர் ஆணையர் சுபாஷினி நாராயணன், செனட்டர் டத்தோ ஸ்ரீ S. வேள்பாரி, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தின் ஷைலா நாயர் உள்ளிட்ட பிரமுகர்களும் அதில் பங்கேற்றனர்.
சண்டா மேளம், கலாச்சார நடனங்கள், ஓணம் பாடல்கள் போன்ற அம்சங்கள் வந்திருந்த 800-க்கும் மேற்பட்டோரை மகிழ்வித்தன.