புக்கிட் மெர்தாஜாம், ஜூன்-14, பினாங்கு, செபராங் ஜெயாவில் ஒருவரையொருவர் குத்திக் கொண்டு சண்டை போட்டு வைரலான கடை உரிமையாளரும் வாடிக்கையாளரும் மனக்கசப்புகளை மறந்து, சமாதானமாகப் போயிருக்கின்றனர்.
போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு இருவரும் தத்தம் புகார்களை மீட்டுக் கொள்ள இணக்கம் கண்டதாக, மளிகைக் கடை உரிமையாளரான 49 வயது Goh Yap Eng தெரிவித்தார்.
எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை நல்ல விதமாகத் தீர்த்துக் கொண்டோம். மன்னிப்புக் கேட்டு விட்டோம். நாமெல்லாம் மலேசியர்கள், எனவே இதனை இனியும் நீட்டிப்பது சரியல்ல என அவர் சொன்னார்.
அச்சண்டை நடந்திருக்கக் கூடாது; தேவையில்லாமல் வைரலும் ஆகி விட்டது. உள்ளபடியே அதற்காக தாம் வருந்துவதாக 2 பிள்ளைகளுக்குத் தந்தையான Yap Eng கூறினார்.
தேக்குவாண்டோவில் Black belt வைத்திருக்கும் அவர் முன்னதாக 2 நாட்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்.
மற்றோர் ஆடவரும் கைதானார்.
அவ்விருவரும் மளிகைக் கடையில் சண்டையிட்டுக் கொண்ட காணொலிகள் One By One மற்றும் Gentleman என்ற பெயர்களில் வைரலாகி நெட்டிசன்கள் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருவரும் போலீஸ் புகாரை மீட்டுக் கொண்டுக் கைக்குலுக்கிக் கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
போலீசும், மேல் நடவடிக்கை இல்லை என அச்சம்பவத்தை வகைப்படுத்தியிருக்கிறது.