Latestமலேசியா

PRIMAS: அரசாங்கம் செயல்பாட்டு செலவுகளைக் கட்டுப்படுத்தினால் உணவகங்களில் 50% விலை உயர்வு இருக்காது

கோலாலம்பூர், ஏப்ரல்-15-நாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் உணவு விலைகள் 50 விழுக்காடு வரை உயர்வதைத் தவிர்க்க முடியும் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான PRIMAS தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு, மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக, சங்கத்தின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

தவிர, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளன.

​இதுவரை பயனீட்டாளர்களுக்குச் சுமை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த கூடுதல் செலவுகளை உணவக உரிமையாளர்களே ஏற்று வந்தனர்.

இருப்பினும், தற்போதைய சூழலில் வணிகத்தை நிலைநிறுத்துவது கடினமாகி வருவதாக அவர் கூறினார்.

​எனவே, எரிவாயு, மின்சாரம் மற்றும் மூலப்பொருட்களின் விலைகளை அரசாங்கம் உடனடியாகக் கட்டுப்படுத்தினால், திட்டமிடப்பட்டுள்ள 50 விழுக்காடு விலை உயர்வை நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய விலையிலேயே உணவுகளை வழங்க PRIMAS தயாராக இருப்பதாக கோவிந்தசாமி உறுதியளித்தார்.

பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், உணவகத் துறை நிலைத்து நிற்கவும் அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சங்கம் சார்பில் அவர் கோரிக்கை விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!