கோலாலம்பூர், ஏப் 26 – வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான 6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 155 தங்கக் கட்டிகள் மோசடி தொடர்பாக அனைத்துலக வங்கியின் முன்னாள் நிர்வாகி மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன.
அந்த தங்கக் கட்டிகள் தொடர்பான மூன்று பொய்யான ஆவணங்களை தயாரித்ததாக Al Rajhi Banking & Investment Corpporation (M) பெர்ஹாட்டின் முன்னாள் நிர்வாகியான Saibulrijal Saadடிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிபதி Azrul Darus முன்னிலையில் வாசிக்கப்பட்டது. 46 வயதுடைய Saibulrijal தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று Bangsarரில் உள்ள வங்கியில் இருந்து தங்கக் கட்டிகளை எடுக்க இரண்டு மோசடி ஆவணங்களை தெரிந்தே பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதியன்று அதே வங்கியில் இழப்பீட்டுக் கடிதத்தை பொய்யாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை ,அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 471 ஆவது மற்றும் 465 பிரிவின் கீழ் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் RM15,000 ஜாமீன் விதிக்குமாறு நீதிமன்றத்தை அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் டி.பி.பி Norfauzani Nordin வலியுறுத்தினார். இதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் அடுத்த விசாரணைக்கான தேதியை ஜூன் 14ஆம்தேதிக்கு நிர்ணையித்தது.