
ஷா ஆலாம், அக்டோபர்-18 – சிலாங்கூரில் RON95 பெட்ரோலில் தண்ணீர் கலந்திருந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, 7 பெட்ரோல் நிலையங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நிலையங்களில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்களின் இயந்திரங்கள் பழுதடைந்ததாக இதுவரை 10 அதிகாரப்பூர்வ புகார்கள் பெறப்பட்டுள்ளன.
வாகனங்களின் இயந்திரங்களில் வழக்கத்திற்கு மாறான சத்தம், அதிர்வு, சக்தி இழப்பு மற்றும் இயந்திரம் இயங்க மறுப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெட்ரோல் நிலையங்களிலிருந்து 27 கொள்கலன்களில் RON95 பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இரசாயனத் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சில வாகனங்களின் எரிபொருள் தொட்டிகளில் தண்ணீர் கலந்திருந்ததே இயந்திரப் பழுதுக்குக் காரணம் என சேவை மையங்களின் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் சிலாங்கூர் கிளை தெரிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பெட்ரோல் வாங்கிய இரசீதுகளையும் வாகனப் பழுதுபார்ப்பு அறிக்கைகளையும் பாதுகாத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



