
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24,
20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டியின் போது, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ அந்த மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டார்.
அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சி மற்றும் பேச்சுவார்த்தையின் பலனாக, பள்ளி மறுநிர்மாணத்திற்காக 4 ஏக்கர் நிலத்தை ஒதுக்க SP Setia நிறுவனம் ஒப்புக்கொண்டதாக அவர் சொன்னார்.
SP Setia நிறுவனம், பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு சுந்தராஜூ நன்றி தெரிவித்தார்.
மிக விரைவில், இந்த வரலாற்றுச் சாதனையை நினைவுகூரும் சிறப்பு விழா நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
இது மலாக்கோஃப் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் என, பினாங்கு மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் சிறப்பு செயற்குழுத் தலைவருமான சுந்தராஜூ சொன்னார்.



